அக்கா குருவி





ரவின் துகிலுரித்தபடி வரும் ஒளியின் குரலாய்
தினம் மௌனம் தின்றபடி காலையில் வந்து விடும் அந்தக்குயில்

இருளடர்ந்த இளங்காலையின் அரவமற்ற வெளியில்
ஏதோ மரத்தில் இருந்தபடி என்னை அழைக்கும்
குரல் வருவது வெளியிலிருந்தா
அன்றி எனக்குள்ளிருந்தா என்ற குழப்பம் ஏனோ எப்போதும் மிஞ்சும்
அதன் மொழியில் என் பெயர் அது போல
அதன் அழைப்பில் என்னை மட்டுமே உணர்வேன்


வெகு சில சமயங்களில் உடனிருக்கும்
பிறருக்கு ஏனோ அது கேட்பதில்லை
எனக்கு மட்டுமே என் செவியில் முத்தமிடும்
உலக பிறப்புகளின் அழுகையும்
மரணங்களின் ஓலமும் கலந்த
உயிரைக்கிழிக்கும் குரல் அதற்கு
ஒவ்வொரு நாளும் உணரமட்டும் முடிந்த
ஒரு கதையைச்சொல்லி அழும்
பிறப்பறுக்கும் பெருங்கதைகளல்ல அவை
பட்டாம்பூச்சிச்சிறகின் வருடல் போன்ற சிறுகதைகள் தாம்
எப்போதும் அக்கதைகள் ஏதோ தேடலோடு தான் முடியும்
குழப்பத்தோடு எழும் உலக இரைச்சலில்
என்னை தள்ளி விட்டுவிட்டு அது பறந்து செல்லும்
நாள்முழுதும் நினைத்தபடி இருப்பேன்
சிறுவயது தெருக்கோடி விளாமரத்துக்கிளையில் வசித்த
அக்காகுருவியின் அழுகைக்கு
பதில் கிடைத்ததா என்று
இந்தக்குயிலிடம் கேட்கவேண்டுமென்று
நாள் முழுதும் நினைத்தபடி இருப்பேன்
மறுகாலை மௌனத்தில் புதுக்கதை கேட்கும்வரை.
-மாயா

கருத்துகள்

மிளிர் பதிவுகள்