அந்த வானில் நிறங்களுக்கு பதில் சொற்கள்
காற்றில் எண்ணங்களின் வாசனை
மாய நிலத்தில் கதை கதையாய் மரங்கள்
கற்பனை வண்ணப்பூக்களாய் அங்கு பூத்துச்சிரிக்கும்

எப்போதும் போல
அந்த உலகின் விளிம்பில் நிற்கிறேன் நான்
ஒரு கதை மரத்தின் சிரித்த கிளையிலிருந்து
பட்டுப்பாவாடை உடுத்திய கிளியொன்று ஊஞ்சலாடியபடி
என்னைப்பெயர் சொல்லி அழைத்தது

அருகே செல்ல அடியெடுக்கிறேன்
விளிம்பின் சுவர்கள் மெல்ல உடைகின்றன
கறுமை பொருந்திய இயந்திரக்கரமொன்று
என் கால்பற்றி இழுக்கிறது
மாயங்களற்ற கற்பனைகளற்ற வானவில்லற்ற
வெளிர் வானத்தில் என்னை அமிழ்த்துகிறது

எப்போதும் போலவே 
எல்லாம் மறந்து 
காலம் தொலைத்து 
கருப்பு வெள்ளை உலகில் நான் மூழ்குகிறேன்

விழியோரம் வானவில் பட்டுப்பாவாடையில்
இன்னும் அந்தக்கிளியின் ஊஞ்சல் ஆடிக்கொண்டேயிருக்கிறது...

மாயா

கருத்துகள்

மிளிர் பதிவுகள்