மாயக்காதல்





முன்பெல்லாம் அது என் மேசையின்
ஏதாவதொரு மூலையில் அல்லது
என் படுக்கைக்குப்பின் ஓளிந்திருக்கும்
எனக்காய்த்தோன்றுகையில் நானாக தேடியெடுப்பேன்

நாங்கள் கூடும் காலங்கள் எங்களுக்கு மாத்திரமானவை
யாருக்கும் தெரியாத சுகமான ரகசியங்கள்
எதையும் என்னிடமிருந்து எதிர்பார்க்காது அது
கையடக்கமாய் விரிந்து என்விரல் சொல்லக்கேட்டபடி தன்னைச்செதுக்கிக்கொள்ளும்

கூடிக்கலவி உச்சமடைந்து வார்த்தைகளை பிரசவித்தபின்
மீண்டும் அவரவர் மூலைகளில் முடங்கிவிடுவோம்
அப்படியொரு அமைதியான சுமுக உறவு எங்களுக்குள்

இப்போதெல்லாம் அப்படியல்ல
அது முற்றிலும் மாறிவிட்டது
அதன் வடிவம் கலைந்துவிட்டது
அதற்கு முகம் கூட வந்துவிட்டது
ஒளிவதில்லை அது
நித்தமென்னைத்தேடியலைகிறது
எங்கிருந்தாலும் வந்து என் தலைக்குள் ஏறிக்கூத்தாடுகிறது
பிடிக்காத போதுகளிலும் கூட என் கரம்பற்றி இழுக்கிறது

எங்கள் உறவு இனி எப்போதும் மேடையில்
எங்கோ இருப்பவரையும் அழைத்து வந்து 
காட்டுகிறது அது
என் ஒதுக்கம் குறித்த கவலையில்லை அதற்கு
உறக்கச்சொன்னால் பொய் சொல்கிறாய் என்று ஓங்கிச்சிரிக்கிறது

என்னைக்குடைந்து ஏதோ சொல்ல வைக்கிறது
எனக்காக அதைத்தேடுவது போய்
அதற்காக நான் எனைத்தின்னும் காலமாகி விட்டது
பிடிக்கவேயில்லை எனினும் பிடிக்கவே செய்கிறது
அது என்னைக்காவல் காக்க ஆரம்பித்துவிட்டது
என்னை அதட்டுகிறது
அடிக்கடி கவனிக்கச்சொல்கிறது
நான் மறுத்தால் என்னைப்புறக்கணித்துத் துன்புறுத்துகிறது
அதன் புறக்கணிப்பைத்தாள முடியாத மயக்கநிலையிலேயே என்னை வைத்திருக்கிறது

அதனிடமிருந்து விடுதலை கிடைக்குமா என்று உரக்க ஏங்குகிறேன் 
உள்ளுக்குள் கிடைக்கக்கூடாது என்று வேண்டியபடி

அத்தனையும் கவனித்துக்கொண்டு
அட்டனக்கால் போட்டுக்கொண்டு
அட்டகாசமாய் என் முகம் பார்த்துச்சிரிக்கிறது
அந்த பாழாய்ப்போன முகநூல்

மாயா

கருத்துகள்

மிளிர் பதிவுகள்