அங்கே நான் இல்லை



யாழும் குழலும் பண்ணும்
இசைகூட்டாத பாடலொன்று
தாளலயமோ நயமோ தேவையற்ற பாடல்
உரத்து ஒலிக்கிறது...
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
எனக்கேயான ஒற்றைப்பாடல் அது
யாருக்கும் கேட்பதில்லை என்னைத்தவிர
துயிலோ விழிப்போ ஊடறுக்க முடியாத
மிக நீண்ட பாடல்
எத்தனைக்கூச்சல் நிறைந்த இடத்திலும்
இந்தப்பாடல்
தெளிவாய் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது
பிற ஒலிக்கோர்வைகளின் மேலேறி
உரத்து இசைக்கும் பாடல் அது
சில சமயம் ஓலமாயும்
சில போது இனிமைபொதிந்தும்
சமயங்களில் வேகம் நிறைந்தும்
அல்லது வெகு மெல்லிய முணுமுணுப்பாயும்
அது ஆழ்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
பாடல்வரிகளில் மொழியில்லை
மௌனத்தின் அடிபொதிந்த பொருள் எனக்குப்புரிந்தே இருக்கிறது
அது என்னை அழைத்துக்கொண்டே இருக்கிறது
எங்கெனத்தெரியாத ஏதோவொரு ஒளிப்புள்ளி நோக்கி மெல்ல எனை நகர்த்திச்செல்கிறது அது
அந்தப்பாடல்..
அது இல்லாத இடமெனில்
அங்கே 'நான்' இல்லை.
மாயா

கருத்துகள்

மிளிர் பதிவுகள்