கவிதைக்கிணறு





றட்சியின் வெம்மை புகைய
இருண்டு சுருங்கும் கிணறு

நேற்றைய அலைகளின் படிமங்கள் 
இறுகிய பாறைகளாய் இருளுண்டு கிடக்கின்றன

உயிர்ப்பின் மதர்ப்பில் முன்பு
உடைந்தோடிய நீர்க்குமிழ்களின்
ஒலித்திவளைகளை கனவில் 
சுமந்தலையும் சவக்குளிர்காற்று
பெருகித்திரண்ட புனல் புணர்ந்து
ஈரப்பசுமை கிளர்ந்த நினைவில்
சுவர்கள் கேவும் ஒலி 
பலமற்ற எதிரொலியாய்
மடங்கி இருளில் கரைகின்றன

புனலுண்ட யாவையும்
வறட்சியின் கூர்நா கத்தியால்
கிழிபட்டு இறந்து கருகும் நாற்றம்
மெல்ல மயானமாகின்ற கிணற்றினொரு மூலையில்
மலட்டுத்தரையின் ஏதாவதொரு இணுக்கிலிருந்து 
இன்றாவது ஈரம் கசியுமென்ற நம்பிக்கையோடு
காத்துக்கிடக்கிறதிந்த ஊமைத்தவளை
-மாயா

கருத்துகள்

மிளிர் பதிவுகள்