என் மாய(யா) உலகம்

Image may contain: one or more people, people standing, flower, sky, plant, nature and outdoor

முன்னே இருப்பது
கந்தகங்கமழும் கான்க்ரீட் காடு
என்னுள் தெரிவது 
பூந்தென்றல் அலையும் பொதிகையின் காடு
என் நாற்புறமும் சாளரஞ்சூழும்
வெறுமையடர்ந்த சுவர்கள்
கணத்தில் வானவில்லில் தோய்ந்த
கார்கால மலர்ப்புதர்களாகின்றன
இறங்கி வெளியே நடக்கிறேன்
கல்தரையும் தோல்செருப்பும் மீறிக்கொண்டு
பாதம்தீண்டும் பனிநுனியோடு பஞ்சுப்புல்தரை
வலப்புறக் கண்ணாடிக்கோபுரம் வடிவுருகி வழிந்தோடி முகங்காட்டும் நீர்த்தடாகமாகிறது
இடப்புறப் பெருங்கட்டிடம் உதிர்ந்து
இறுகப்பிணைந்த மரக்கூட்டமாகிறது
எதிர்வரும் மதில்களின் சாளரத்துச்சீலைகள்
கிழிந்து பறந்து வண்ணத்துப்பூச்சிகளாய்
கன்னம் வருடிச்செல்கின்றன
சாலையிரைச்சல் சில்வண்டுகளின் கச்சேரியாகிறது
கூடெனச்சூழும் தூசிப்புகையும்
அருவிப்புனலெழுப்பும் சாரலாய்...
என்னைச்சுற்றுமுள்ள உலகு வேறு
எனக்குள் நீண்டு பரவும் உலகு வேறு
என் புறக்கண்களுக்கும் அகக்கண்களுமிடையே
அப்படி ஒரு ஏற்பாடு...
-மாயா

கருத்துகள்

மிளிர் பதிவுகள்