வானம் லட்சம் மலர்களாய் பூத்து கனத்துக்கிடக்கிறது
இறங்கி மிதந்து என்னைப்பார்த்துச்சிரிக்கிறது
எட்டி விரல் தொட்டு வண்ணம் குழைக்க முயல்கிறேன்
அது மேகப்பந்துகளில் ஏறி ஒளிந்து கொண்டு கண்ணாம்பூச்சி காட்டுகிறது
எனக்குக்கீழே பூமி குளித்தும் துவட்டாத பிள்ளையின் தலை போல நுனி பனித்துக்கிடக்கிறது
அது தன் தண்ணீர் விரல்களால் என் முதுகை நெருடி முத்தமிட்டுக் கரைகிறது
என்னைச்சுற்றிய பெரும் வெளி அதை நிறைத்த பெருவளி எதுவும் எனக்குப்புலப்படவில்லை
என் கண்களை வானமே நிறைத்து நிற்கிறது
சிறு விழிகளுக்குள் அத்தனை பெரிய ஆகாயத்தை அடைக்க முடியவில்லை
கண்கள் மூடினால் கலைந்து விடுமோ என்ற பயத்தில் வெறித்துப்பார்த்தபடி கிடக்கிறேன்
கண்ணீர் பெருகி வழிந்து தரையின் பனியோடு கலந்தோடுகிறது
அசையாத உடலின் பிரஞ்ஞை மெல்லக்கரைகிறது
காற்றின் மோன கீதத்தில் அந்தப்பெருவெளியில் மிதக்கிறேன்
எனக்கான பாடல், நான் அறியாத பாடலை காற்று என் காதில் பாடுகிறது
நான் நானாகத்தெரிகிறேன் நானில்லாமலும் தெரிகிறேன்
வானம் அருகே வந்தது போலத் தோன்றுகிறது
மீண்டும் விரல் நீட்டுகிறேன், அது மேலே தாவிக்கொள்கிறது
அந்தப்பெருவெளியின் பிரம்மாண்டமாய் நான் தெரிகிறேன்
தனியளாய் அனைத்தும் நிறைத்துக்கிடக்கிறேன்.
பின் மீண்டும் தரையில் கிடக்கிறேன்
வானம் சிரிக்கிறது
காற்று பாடுகிறது
பூமி அணைக்கிறது
பின் திடீரென்று ஏதோவொன்று வந்து இமையகட்டிப்பிரிக்கிறது
கண்ணீர் துடைத்தபடி விழி விரித்துப்பார்க்கிறேன்
விடிந்து விட்டது.
- மாயா

கருத்துகள்

மிளிர் பதிவுகள்